கல்வியில் முன்னணி வகித்த யாழ்ப்பாணம் இன்று மது பாவனையில் முதல் இடத்தில்

18.9.12

யாழ்.மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் முன்னணி வகித்து சாதனை படைத்தது. ஆனால் இன்று மது பாவனையில் முன்னணி வகிக்கின்றது. இன்று கல்வித் தர நிலையில் யாழ். மாவட்டம் 9 ஆவது இடத்தில் உள்ளது. என்று யாழ். கல்வி வலய கல்விப் பணிப்பாளர் வி.செல்வராசா தெரிவித்தார். புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் கல்லூரி அதிபர் ஆர்.இராசமனோகரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே செல்வராசா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: 9ஆவது இடத்துக்கு வீழ்ச்சி யாழ்.மாவட்டத்தின் கல்வித்தரம் தேசிய மட்டத்தில் முன்னணி வகித்த நிலைமாறி, 2011 ஆம் ஆண்டு ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் 9 ஆவது இடத்துக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இது கவலைக்குரியது. இந்த நிலை தொடர்பாக சமூகத்தில் பொருத்தமான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இந்த வீழ்ச்சிக்கு ஆசிரியர்களும் கல்வி நிர்வாகிகளும் தான் பொறுப்பு எனக் கூறிக்கொண்டு பெற்றோரும் சமூகமும் அக்கறை கொள்ளாமல் இருக்கக்கூடாது. உண்மை நிலையை உற்றுநோக்க வேண்டும். எமது சமூகத்தின் பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட திடீர்மாற்றமும், மாணவர் மத்தியில் ஏற்பட்ட பணப்புழக்கமும் கட்டுப்பாடு இன்மையும் தான் இதற்குக் காரணம். இந்த விடயத்தில் பெற்றோர் தமது பங்களிப்பை மறந்து விடக்கூடாது. நிதானத்துடன் உற்றுநோக்கி சீர் செய்யவேண்டும். தரம் 5 புலமைப்பரிசில் வரை பிள்ளைகளின் கல்வியில் காட்டும் அக்கறையையும் வழிப்படுத்தலையும் தொடர்ந்து மேற்கொள்ளத் தவறியமை. பிள்ளைகளை வாழ்விடத்துக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளாமல் நகரப் பாடசாலையில் மற்றும் தூர இடங்களில் உள்ள பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதால் மாணவர் மத்தியில் ஏற்பட்ட திடீர் மாற்றம். கையடக்கத் தொலைபேசிப்பாவனை, பிள்ளைகள் மத்தியில் தேவைக்கு அதிகமான பணப்புழக்கம், ஆடம்பரமான வாழ்க்கை வசதி, பெற்றோரின் தொலைக்காட்சி பாவனை, மோட்டார் சைக்கிள் பாவனை, பொருத்தமில்லாத நண்பர்களின் தொடர்பு நிலை. இந்த விடயங்களில் காணப்படும் தீமைகளைக் கட்டுப்படுத்துவதில் சீர்செய்வதில் பெற்றோர் தமது பங்களிப்பில் தவறு விடுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டில் தொடர்ச்சியான அக்கறையும் மேலான கவனமும் செலுத்தும் அதேநேரத்தில், தமது வாழ்விடத்துக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிராமியச் சூழலில் சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகள் செயற்பட வேண்டும் என்பதற்காகவே இசுறு பாடசாலை மற்றும் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டம் 5000 ஊட்டப்பாடசாலை வேலைத்திட்டம் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளை நோக்கி அனுப்பி வைப்பதால் எதிர் கொள்ளும் தீமைகள் அதிகம். இந்த நிலையில் தமது வாழ்விடத்துக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும். யாழ்.கல்வி வலயத்தில் உள்ள மூன்று கோட்டங்களில் நல்லூர், யாழ்ப்பாணம் கல்விக் கோட்டம் இரண்டும் கல்வியில் முன்னணியில் இருக்கும் அதேநேரம் கோப்பாய்க் கல்விக் கோட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போதைய கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையிலும் குறைந்த மட்டத்தில் கோப்பாய் கோட்டம் உள்ளது. ஏன் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். கோப்பாய் கல்விக் கோட்டத்தில் உள்ள மாணவர்களில் திறமையுள்ளவர்கள் நல்லூர், யாழ்ப்பாணம் கல்விக் கோட்டப் பாடசாலைகளில் அனுமதிபெற்று கற்கின்றனர். அவர்களின் பெறுபேறு அந்தக் கோட்டங்களுக்கு உரியதாகி விடுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் கோப்பாய் கோட்டத்தின் கல்வி அடைவுமட்டம் உயரவேண்டும் என்றார். நிறுவுநர் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவனும் அச்சுவேலி புனித திரேசாள் கல்லூரி ஆசிரியருமான க.துஷ்யந்தன் நிகழ்த்தினார்.

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

மதுவை ஒழிக்க வேண்டும்.......


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)