தமிழ் இளைஞர்களே அவுஸ்திரேலியா பயணத்தில் ஏமாறாதீர்கள்

10.9.12


தமிழ் மக்களின் குழுமத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டமே அவுஸ்திரேலிய பயணங்களாகும். இதற்கு தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் ஏமாறாது தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ். குகவரதன் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

போரால் அனைத்தையும் இழந்த தமிழ் சமூகத்தில் எஞ்சியுள்ள இளம் சமூகத்தையும் நடுத்தெருவில் தவிக்க விடுவதே இந்தப் பயணங்களில் இலக்காகும். இன்று நாட்டில் அனைத்து ஊடகங்களிலும் நாம் கேள்விப்படும் செய்தி அவுஸ்திரேலியாவுக்குப் புகலிடம் கோரி சட்டவிரோதமாகச் சென்ற குழுவினர் கைது எனபதாகும்.

காலி, நீர்கொழும்பு உட்பட பல பகுதிகளில் இவ்வாறான படகுகள் படையினரால் சுற்றி வளைக்கப்படு கின்றன. இவ்வாறு பயணிப் போரில் மூவினத்தவர்களும் இருந்தாலும் அதிக எணணிக்கையில் வடபகுதி தமிழ் இளைஞர்கள், யுவதிகள், குடும்பஸ்தர்களே காணப்படுகின்றனர்.

இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு படகுகளில் பயணம் செய்த பெரும்பாலான வடபகுதித் தமிழர்கள் தமது பணத்தையும் இழந்து சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

வடபகுதி தமிழ் இளைஞர்களை நிர்க்கதியாக்கும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையே அவுஸ்திரேலிய புகலிடப் பயணமாகும்.

போரால் பாதிக்கப்பட்டு நிற்கும் வடபகுதி தமிழ் மக்கள் குழுமத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அங்கு பெரும்பான்மை இனத்தவரை குடியேற்றி தமிழ் சமூகத்தை முற்றாக இல்லா தொழிக்கும் நோக்கிலேயே அதிகாரகுழு வொன்று இந்தத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

தமிழ் சமூகத்தை பொருளாதார ரீதியில் முடக்கி மூடர்களாக்கு வதன் மூலம் அந்தச் சமூகம் உரிமைகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும். இதனையே இந்தக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

எமது சமூகம் போரால் அனைத்தையும் இழந்து விட்டது. எஞ்சியுள்ள இளம் சமூகமும் அழிய வேண்டுமா? “அவுஸ்தரேலிய புகலிடம்” என்ற மாயையில் சிக்கி பணத்தையும் உரிமைகளையும் இழந்துவிடாதீர்கள். சுயதொழில்கள் அல்லது இலங்கைக்குள் தொழில்களில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் சட்ட ரீதியாக வெளிநாடு செல்லுங்கள் என தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :