குடாநாட்டில் ஒரு வாரத்தில் 6 பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம்!

10.9.12

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக காவல் நிலையங்களில் கடந்த வாரத்தில் மட்டும் ஆறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோக சம்பவங்களும் காதலால் உண்டான சம்பவங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

யாழ்.மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா இந்தத் தகவலைக் கூறினார். யாழ். சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்.குடாநாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக 6 முறைப்பாடுகளும் மாங்குளத்தில் ஒரு முறைப்பாடுமாக ஏழு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் 3 முறைப்பாடுகள் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இளவாலை காவல்நிலையப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கடந்த 2 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபரும் சிறுமியும் காதல் கொண்ட நிலையில் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.

வட்டுக்கோட்டை காவல்நிலையப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 2 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றபோதும் கடந்த 5 ஆம் திகதியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் காவல்நிலையப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி பிரஸ்தாப சிறுமியை புதுக்குடியிருப்புக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்துத் துஷ்பிரயோகம் செய்துவிட்டு சந்தேகநபர் தலைமறைவாகிவிட்டார்.

அங்கு சென்ற மானிப்பாய் காவல்துறை, சிறுமியை மீட்டதோடு சம்பவத்துக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளர்களான கணவன் மனைவி இருவரையும் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் காவல்துறைப் பிரிவில் இடம்பெற்ற மற்றொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயதுப் பெண் தனது சொந்த வீட்டில் தங்கியிருந்த போது அங்கு தங்கியிருந்த ஒன்றுவிட்ட சகோதரனான பதுளையைச் சேர்ந்த 17 வயதுடைய நபரே இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்று கடந்த 5 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் காவல்நிலையப் பிரிவில் 15 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றி கடந்த 3 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே பிரிவைச் சேர்ந்த 31 வயதான நபரே இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மனநலம் குன்றிய 18 வயதுப் பெண் அவரது பெரிய தந்தையாரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

ஓமந்தை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 17 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த வருடம் நவம்பர் 21 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரே பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று கடந்த 5 ஆம் திகதி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகங்கள் நடந்து காலங்கடந்து முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்கள் சிறுமிகள் கருத்தரித்து வைத்தியசாலைக்குச் சென்றபோது பதிவானவை. செட்டிக்குளம் காவல்நிலையப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கருக்கலைப்புச் செய்தார் என்று கூறி பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.

0 கருத்துக்கள் :