புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி..: சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு

4.9.12


இது நாம் அமைதியாக உறங்கிக் கிடக்கும் நேரம் அல்ல.. எம்மினம் பட்ட துன்பங்களை நாம் மறந்து விட்டோமா..? குழந்தைகள் , இளையோர்கள் , கர்ப்பிணிப் பெண்கள் என்று கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டோமா..?

இன்னமும் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டோமா..? அன்றே சர்வதேசத்தின் கதவுகளை நாம் தட்டிக் கேட்டோம்,
ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இன்று அவர்களே அதை கேட்கும் தருணத்தில் நாம் அமைதி காப்பது சரியா..?

நாம் எமது மண்ணிற்காகவும், எம்மினிய உறவுகளுக்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் பலவுள்ளன. எமது காலத்தின் கடமை உணர்ந்து பொங்கு தமிழராய் வாரீர்
22.09.2012 அன்று ஐ.நா முன்றல் நோக்கி என்று சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் அறைகூவல் விடுத்துள்ளனர்..!

இருப்பவரின் எதிர்காலம் கருதியாவது இன்றாவது நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டாமா...!

எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய உலகவாழ் தமிழீழ மக்களே…!

யாழ். பல்கலைக்கழக சமூகத்தால் தமிழர் தரப்பு அபிலாசைகளை, உரிமைகளை, நியாயங்களை வெளிக்கொண்டு வருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வானது இன்று கடல் கடந்து, கண்டங்கள் கடந்து தமிழ்மக்களால் மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்ததே…!

சிங்களப் பேரினவாதம், மீண்டும் எமது அபிலாசைகளை, உரிமைகளை, நியாயங்களை உலகின் காதுகளுக்கு உரக்கச் சொல்ல வேண்டிய நிலைக்கு எம்மை தள்ளிவிட்டுள்ளது.
அந்தவகையில் பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடாத்தப்படும் தொடர் தமிழினப்படுகொலைக்கு எதிராகவும், தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை தமிழ்மக்களின் விடுதலை இயக்கமாக அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும், உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ம் திகதி, சனிக்கிழமை 14:00 மணிக்கு சுவிட்சர்லாந்து, ஜெனிவா ஐ.நா சபைக்கு முன்பாக அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் உலகளாவிய ரீதியில் பொங்குதமிழ் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த பொங்குதமிழ் 2012 பேரெழுச்சி நிகழ்வுக்கு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் எமது முழு ஆதரவை ஏற்பாட்டுக்குழுவினருக்கு வழங்கி நிற்பதோடு, தமிழ்மக்களாகிய எம்மால் சர்வதேசத்தின் முன்னால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றோம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்“ என்று அறைகூவி தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாக தீபம் மாவீரன் திலீபன் அண்ணாவின் 25வது நினைவாண்டுத் தினம் கடைப்பிடிக்கப்படும் மாதத்தில் நடாத்தப்படும் இப் பொங்குதமிழ் நிகழ்வுக்கு எம்மினிய உறவுகள் அனைவரும் ஒரே அணியில் அலை அலையாக திரண்டு சர்வதேசத்தை எமது நிலம் எமக்கே வேண்டும் என்ற அடிப்படையில் எமக்குரிய ஒரே தீர்வாகிய தனித்தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுமாறு எம்மக்கள் அனைவரையும் குறிப்பாக இளையோர்கள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரையும் நாம் வேண்டி நிற்கின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் “போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறப்போவதில்லை“ என்ற சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக நாம் அனைவரும் ஒருமித்து கைகோர்த்து பொங்குதமிழ் எழுச்சியை கடந்தமுறையை விடவும் இம்முறை மிகவும் எழுச்சிமிக்கதாக மாற்றுவதற்கு இந்நாளில் உங்கள் தனிப்பட்ட கொண்டாட்டங்களையும், தமிழ்ப் பாடசாலைகள், அமைப்புக்கள், பொது நிறுவனங்கள் அனைத்தும் இந்நாளில் தங்கள் நிகழ்வுகளை மதியம் 14:00 மணிக்கு முன்னதாக நிறைவு செய்யுமாறும், தமிழ் வியாபார நிறுவனத்தினர் மதியம் 14:00 மணியுடன் அவற்றைப் மூடி இப் பொங்குதமிழ் பேரெழுச்சி நிகழ்வுக்கு உங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்குமாறும் உங்கள் பிள்ளைகளாகிய நாங்கள் அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த பொங்குதமிழ் 2012 வெற்றி நிகழ்வானது நாளைய எமது தேசத்தை நிறுவுவதற்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என்ற பெரு நம்பிக்கையோடு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் யாவும் வெற்றி பெற மீண்டும் மனதார வாழ்த்துவதுடன் அதற்காக என்றும் உங்களோடு கைகோர்த்து நிற்போம் எனவும் உறுதிபடக் கூறுகின்றோம்.

இளையோர் சக்தி வளர்ந்திட இளையோர் அமைப்பு ஆகிய எம்முடன் கைகோர்க்குமாறு சுவிஸ் இளையோரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நாளைய புரட்சி இளையோர் கைகளில்…!

நன்றி
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு

0 கருத்துக்கள் :