யாழ் குடாவில் அதிகரித்து வரும் இராணுவ புலனாய்வு பிரி​வினரின் சேட்டைகள் மற்றும் வேட்டைகள்!

23.8.12

யாழில் இருக்கும் கிராமங்களில் குறிப்பாக வடமராட்சியில் தற்பொழுது மர்ம நபர்களின் நடமாட்டங்கள் அதிகரித்து வருகின்றது. கிராமங்களுக்குள் உட்புகும் ஆயுதம் தரித்த தமிழ் பேசும் குழுக்கள் சில வீடுகளுக்குள் புகுந்து, இரவு நேரங்களை அங்கு கழிக்கின்றனர்.
 
மேலும் தமக்கு தேவையான உணவுகளை வாங்கி செல்கின்றனர். பொதுமக்கள் பலரும் அச்சதால் இது குறித்த விடயங்களை வெளியில் கூறாமல் மறைத்து வருகின்றனர்.

என்னதான் மக்கள் வெளிப்படுத்தா விட்டாலும் கண்ணில் எண்ணெய் விட்டு அலையும் இராணுவ புலனாய்வு பிரிவினர் எவ்வாறோ மோப்பம் பிடித்து விடுகின்றனர்.

நேற்று இரவு கரவெட்டியில் ஒரு வீட்டை சிவில் உடையில் சுற்றிவளைத்தனர் இராணுவத்தினர். அங்கு சல்லடை போட்டு கிணறு உட்பட பல இடங்களிலும் தேடுதல் நடாத்தினர்.

சிவில் உடையில் இராணுவத்தினர் வீட்டுக்குள் தேடுதல் நடாத்திய வேளை, வெளியில் இராணுவ உடையில் இராணுவத்தினர் காவலில் ஈடுபட்டனர். சுற்றி வளைப்புக்கு ஒரு சில மணிநேரம் முதலில் குறிப்பிட்ட வீட்டுக்கு செல்லும் பாதைகளில் தடை போட்டு இராணுவத்தினர் காவலில் இருந்தனர்.

இரு வாகனங்களில் சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் வீட்டுக்குள் புகுந்து தேடுதல் நடாத்தினர். பல மணிநேரம் தேடுதல் நடாத்தியும் அங்கு எதுவும் கிடைக்கததால் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

குறிப்பிட்ட வீட்டில் இரு வயோதிபர்கள் வசித்து வந்துள்ளனர். இந்த வீட்டில் ஆயுதங்களுடன் சில நபர்கள் தங்கியிருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவலை வைத்தே இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். தேடுதல் முடிந்த பின்பு குறிப்பிட்ட இடத்துக்கு புலனாய்வு பிரிவினர் வந்து மறுபடியும் தேடுதல் நடாத்தியுள்ளனர்.

அங்கு வந்த சிவில் உடை அணிந்த இராணுவத்தினர் சிலர் அன்று காலை குறிப்பிட்ட வீட்டுக்கு அருகில் நடமாடியதாக பிரதேசவாசிகள் கூறினர். எமக்கு குறிப்பிட்ட சுற்றிவளைப்பின் படங்களும் கிடைக்கப் பெற்றன. இதில் தென்படும் புலனாய்வு பிரிவினர் முன்னாள் போராளிகள் எனவும், இவர்கள் வலுக்கட்டாயமாக இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் தெரியவருகிறது.

புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் பெண்களிடமும் சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். பாடசாலை மற்றும் மதிய வகுப்பு செல்லும் பெண்களை வழிமறித்து சோதனை என்ற பெயரில் சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர்.

பெண்களின் புத்தக பைகளுக்குள் கைத்துப்பாக்கியை வைத்து விட்டு, பின்பு அதை எடுத்து அவர்களை மிரட்டவும் செய்கின்றனர். இவ்வாறான செயல்களை நிறுத்த இராணுவ மூத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

 

0 கருத்துக்கள் :