மற்றவர்களை அடையாளம் காணமுடியாத நிலையில் தமிழ் அரசியல் கைதி: மனோ கணேசன்

30.8.12

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து கொழும்பு பெரியாஸ்பத்திரி 50ம் வாட்டுக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் சிறைக்கைதியை ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்கரா, பாராளுமன்ற உறுப்பபினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் சென்ற பார்வையிட்டுள்ளனர்.

அரசியல் கைதியின் மனைவி கவிதா மற்றும் மகனுடன் சென்று பார்வையிட்ட பின் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் கருத்துத் தெரிவிக்கையில், மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்க் கைதி சுந்தரம் சதீஸ் அவர்கள் வழக்கு ஒன்றிற்காக காலி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வழக்குத் தவணையின் பின் திடீர் என காலி கராப்பிடிய வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

அவருடைய மனைவி கவிதா சதீஸ், தனது கணவரை கொழும்பு பெரியவைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்களுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி கேட்டதற்கிணங்க, தமிழ் அரசியல் கைதி கொழும்பு பெரியவைத்தியசாலை 50ம் வாட்டுக்கு மாற்றப்பட்டார்.

அவரை வைத்தியசாலைக்குச் சென்று பார்த்த போது, பாரிய கட்டுப்போடப்பட்டுள்ளதுடன் கண்விழித்திருந்தாலும் வருபவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலையிலும் அவரின் கால் சங்கிலியால் கட்டிலுடன் இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

கடமையில் இருந்த டொக்டருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, மூளையில் இரத்த ஒழுக்கு ஏற்பட்டு அதிகூடிய இரத்த அழுத்தம் காரணமாகவும் மூளைத் தொழிற்பாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கண்விழித்திருந்தாலும் கூட மற்றவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்தாக குறிப்பிட்டார்.

0 கருத்துக்கள் :