இலங்கைப் படையினருக்கு பயிற்சி தொடரும் பல்லம் ராஜு

28.8.12


இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு கூறியிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் எவ்வித ஆயுதப் பயிற்சியையும் அளிக்கக் கூடாது என்று தமிழக அரசும், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், இலங்கைப் படையினருக்கு பயிற்சி தொடரும் என்ற பாதுகாப்பு இணை அமைச்சரின் பதில், "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல்' உள்ளது. அவரது பதில் கடும் கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டு நலன்களைப் புறக்கணித்தாவது இலங்கையை திருப்திப்படுத்த வேண்டும் என்றவாறு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது.


இதுதான் ஜனநாயக முறையில் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கும் தமிழர்களின் உணர்வுக்கும் மத்திய அரசு காட்டும் அக்கறையா?

இலங்கை உள்நாட்டுப் போரின்போது அப்பாவித் தமிழர்களை அந்நாட்டு ராணுவம் கொன்று குவித்தது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, சொல்ல முடியாத அளவுக்கு மனித உரிமை மீறல்கள் அந்நாட்டில் அரங்கேறின.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களைக் குறிவைத்து இலங்கை கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல் களும் பல ஆண்டுகளாக தொடர்ந்தபடி உள்ளது. ஆனால், அவற்றுக்குக் காரணமான இலங்கை ராணுவத் தினருக்கும், அந்நாட்டுக் கடற்படையைச் சேர்ந்த வீரர்களுக்கும் இந்திய மண்ணில் ஆயுதப் பயிற்சி அளித்து மத்திய அரசு நட்பு பாராட்டி வருகிறது.

அந்நாட்டில் நடைபெற்ற போருக்கு இந்தியாதான் துணை நின்றது என்று இலங்கை அரசு கூறுவதை மத்திய அரசின் செயல்பாடு தெளிவாக உணர்த்தி வருகிறது’’ என்று ராஜா கூறியுள்ளார்

0 கருத்துக்கள் :