மனைவி தற்கொலை.செய்தி கேட்டு ஓடி வந்த கணவர் விபத்தில் பலி.

21.8.12


தன்னை விட்டு விட்டு ஜவுளிக் கடைக்கு கணவர் போனதால் அதிருப்தி அடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவலை அறிந்த கணவர் பதறியடித்து வீட்டுக்கு காரில் விரைந்தபோது வழியில் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். அடுத்தடுத்து நடந்த இந்த துயரச் சம்பவங்களால் இப்போது அவர்களுக்குப் பிறந்த 3 மாதக் குழந்தை ஒரே நாளில் பெற்றோரை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த சிக்கத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார்(33) என்ஜினீயரிங் படித்தவர். தென் கொரியாவில் வேலை பார்த்து வந்தார். அவருக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் யாழினி என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

5 மாதத்திற்கு முன்பே தனது ஊருக்கு வந்து விட்டார் ரமேஷ் குமார். அவரது தம்பி சுரேஷ் குமாருக்கு 29ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜவுளி எடுக்க தனது தந்தை, தாயார் ஆகியோருடன் காரில் திருச்சிக்குக் கிளம்பினார் ரமேஷ் குமார். போகும்போது மனைவியை அவர் கூட்டிச் செல்லவில்லை. இதனால் ரஞ்சிதாவுக்கு வருத்தமாகி விட்டது.

இதையடுத்து ரமேஷ் குமார் குடும்பத்தோடு வெளியே போன பின்னர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டார் ரஞ்சிதா. இந்தத் தகவல் ரமேஷ் குமாரை வந்தடைந்தபோது அவர் அதிர்ச்சியாகி விட்டார். உடனே பெற்றோரை அங்கேயே விட்டு விட்டு அவர் மட்டும் காரை எடுத்துக் கொண்டு துறையூர் விரைந்தார்.

திருச்சி மெயின் ரோட்டில் அவரது கார் வந்தபோது திடீரென சமயபுரம் சென்ற அரசு டவுன் பஸ் கார் மீது மோதியது. இதில் காருக்குள் சிக்கிக் கொண்ட ரமேஷ் குமார் உடல் நசுங்கி உயிருக்குப் போராடினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.

அடுத்தடுத்து ரஞ்சிதாவும், ரமேஷ்குமாரும் உயிரிழந்ததால் அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நாளில் பெற்றோரைப் பறி கொடுத்து விட்ட குழந்தை யாழினியைப் பார்த்து உறவினர் கண்ணீர் வடித்தவண்ணம் உள்ளனர்.

0 கருத்துக்கள் :