மக்களின் குடி நீரை பறித்து நீராடி மகிழும் சிங்கள இராணுவம்

22.8.12


வன்னியில் கடும் வரட்சியி நிலவுகின்றது இதனால் மிகவும் சிரமமான நினையில் மக்கள் பணம் கொடுத்து குடி நீரைப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டக பூநகரிப் பகுதி மக்கள் குடிக்க நீரின்றி அலைந்து திரிவதுடன் ஒரு லீற்றர் நீரை ஒரு ரூபா கொடுத்துக் கொள்வனவு செய்கின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் குடிநீரை அதிகாரத்தினைப் பயன்படுத்தி அபகரிக்கின்ற கடற்படையினர் தினமும் 2000 லீற்றர் நீரைக் குளிக்கப் பயன்படுத்துவதாகப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவருகின்ற கடும் வரட்சி காரணமாக மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் என்றுமில்லாதவாறு வற்றியுள்ளதுடன் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையினால் மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளுக்காக அலைந்து திரிவதனைக் காணக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் இவ் வரட்சியின் முழுமையான தாக்கத்திற்கு உட்பட்டு குடிநீரைப்பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரதேசத்தில் மக்கள் தமது நாளாந்த தேவைகளுக்கான நீரினை பணம் கொடுத்துப் பெற்று வருகின்றனர்.

அதாவது பூநகரிப் பகுதியில் ஒரு லீற்றர் தண்ணீர் ஒரு ரூபா கொடுத்துப் பெற்று வருகின்றனர். பிரதேச சபையினர் நீர் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்றபோதிலும் அப்பிரதேச மக்களின் முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு நீர் விநியோகம் இடம்பெறவில்லை.

இதேவேளை முழங்காவில் பிரதேசத்திலும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்ற நிலையிலும் அங்குள்ள கிணற்றில் இருந்து நாளாந்தம் 2000 லீற்றருக்கு அதிகமான நீரினை இராணுவத்தினர் பாரிய நீர்த்தாங்கிகள் மூலம் எடுத்துச் செல்கின்றனர் எனவும் இது அந்த பிரதேசத்தில் அருகில் அமைக்கப்பட்டிருந்த பிரதான கடற்படை முகாமிலுள்ள நீர்த்தடாகத் தேவைக்காகவும் இராணுவத்தின் இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்துவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

0 கருத்துக்கள் :