பற்றி எரியுதடா -எங்கள் தமிழ்தேசத்தை சுற்றியுந் தீயே!

22.8.12


பற்றி எரியுதடா -எங்கள்
தமிழ்தேசத்தை சுற்றியுந் தீயே
குற்றம் எமதல்ல -இனப்
பெரும்பகை வளர்த்ததும் நாமல்ல
முற்றும் பகை தீர்ப்போம் -முழுச்
சுதந்திர தமிழீழம் வென்றெடுப்போம்
வெற்றிக் கொடி பிடித்து -ஈழத்
தெருவெங்கும் நாமெல்லாம் அணிவகுப்போம்''

நிஜத்தில் முன்னோக்கும் முன் நினைவுகளில் சற்றே
பின்னோக்குகிறேன்.விடுதலை இலக்கை நோக்கி
நான் வேகமாய் பறந்து செல்கையில்
எப்போதெல்லாம் பாதியில் எனது சிறகுகள்
முறிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம்
ஆதியை நோக்கி மனது மட்டும் மௌனமாய் பறக்கின்றது .

சுதந்திர இலங்கை எனச் சொல்லப்பட்ட இந்த தேசத்தில்
உண்மையிலேயே சுதந்திரத்திற்காகப் போராடிய ஆரம்ப கால
தமிழர்களின் ஆர்ப்பரிப்புகளை அசைபோடுகிறேன்....
ஒரேயொரு கேள்வி மட்டும் மனதின் ஓரத்தில் எழுகிறது. ''இவையெல்லாம் எதற்காகவென்று''?!....

பெயரளவில் மட்டும் குடிமக்களாய் வைக்கப்பட்டு
பெருமளவில் எம்மக்கள் அடிமைப்படுதப்பட்டப் பொழுது
உருவான கிளர்ச்சிகளின் உச்சபட்ச வளர்ச்சியாக
வட்டுக்கோட்டையில் தந்தை செல்வாவின் தலைமையில் வார்த்தெடுக்கப்பட்டதே ''தனித் தமிழீழத் தீர்மானம் ''
எண்ணிப் பார்க்கிறேன்.... இவையெல்லாம் எதற்காக ?

சிங்களவர்களின் அடக்குமுறையென்பது நாளடைவில்
வளர்ந்து தமிழின அழிப்புமுறையானது .
அதிலிருந்து மீண்டு வர போராடிய எம் மக்கள்
எதிரிகளின் தாக்குதலில் மாண்டு போனார்கள்.
இறக்கும்வரை அவர்கள் வாழ்வில்
சுதந்திரம் பிறக்கவேயில்லை!...
கேட்காமல் இருக்கமுடியவில்லை
இவையெல்லாம் எதற்காக?!....

வாடிய தமிழர்களெல்லாம் ஒன்றாய்க் கூடிய பொழுது
பலம் கொண்டஎம் மக்கள்
பகைவரை எதிர்த்து களம் கண்டனர் .
''நீங்கள் கொடுப்பதற்கும் நாங்கள் வாங்குவதற்கும்
சந்தைப் பொருளல்லவே விடுதலை.
அது எமக்கே எமக்கானது.
அது என்னோடே எப்போதும் இருப்பதுவென்று''
சிங்களக் கூட்டத்திற்கு ''சிம்ம சொர்ப்பனமாய்''....
மன்னிக்கவும் புலிச் சொர்ப்பனமாய் புறப்பட்டுவந்தனரே.
''தமிழர்களின் விழிகளாம் ......
அவர்தாம்''தமிழீழ விடுதலைப் புலிகள்''
அவர்களின் எழுச்சி...அவர்களின் தியாகம் ...
அவர்களின் போராட்டம் ....
பொறுக்க முடியாமல் கேட்கிறேன்
இவையெல்லாம் எதற்காக?....

புடம் போட்ட நமது விடுதலைப் போராட்டத்தை
சிங்களவர்கள் இன்று தடம் மாற்றப்பார்க்கிறார்களே!
அதற்காகவா?....

சொந்தங்களே புதிதாய் அவர்கள் நமக்கு போடும்
பாதைகளெல்லாம் பழைய அடிமைப் பள்ளத்தாக்குநோக்கியே
பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் .

எல்லாம் முடிந்துவிட்டது இனி ஈழம் என்று
எதுவுமில்லை.அதற்கு காலமொன்று எப்போதுமில்லையென்று
தமிழ்க் காதுகளில் சிங்கள வாய்கள் ஓதி
எமது மக்களின் சுதந்திர சிந்தனையைச்
சுத்தமாய்ச் சிதைக்கப் பார்க்கிறது.
லயித்தல்
இனி நமது வாழ்வென்பது உண்ணுதல்
உறங்குதல் லெளகீகங்களில் லயித்தல் மட்டுமேயென்று.......
நீ சுவாசிக்கும் சுத்தமான காற்றில் நஞ்சை
நயவஞ்சகமாய் கலக்கிறான் சிங்களவன்.

ஆடு மாடுகளைப்போல் நம்மை முகாமிற்குள் அடைக்கிறான்.
உடலளவில் அடைப்பதற்காக அல்ல .
உணர்வளவில் அடைப்பதற்காக. . . .
இன்று உணவுப் பசியில் நம்மை வாடவிடுவதெல்லாம்
நமது உணர்வுப் பசியை ஓடவிடுவதற்காக ......

இந்தத் தீவைப் பொறுத்தவரை தமிழனென்பவன்
ஒரு நாள் பிறக்கலாம் ஒரு நாள் இறக்கலாம்.
அதனைத் தாண்டி அவனுக்கென்று இங்கே எதுவுமில்லை. . . .


இந்தத் தீவின் எந்தத் திசைகளிலும்
இனி எந்தக் காலத்திலும்
சுதந்திரப் போராட்டத்தின் கிளைகள்
பரவாமலிருக்கஇநமது விடுதலை வேருக்கு
விஷம் வைக்கப்படுகிறது.

எண்ணிப் பாருங்கள். . . .

இதற்காகவா தந்தை செல்வா தமிழீழத் தீர்மானம் கொண்டுவந்தார்....?
இதற்காகவா போராளிகள் எல்லாம் போராடி மாண்டார்கள்?
இதற்காகவா எமது பெண்களின் மானம் பறிக்கப்பட்டது ?
இதற்காகவா எமது குழந்தைகளுக்குகூட மரணம் பறிக்கப்பட்டது ?
இதற்காகவா . . . .முள்ளிவாய்க்காலில் எம் குலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது ?. . .

''சொந்த தேசத்தை மீட்டெடுத்தலும் குறிப்பிட்டஓர்

இனம் சுதந்திரமாய் வாழ்ந்து வருவதும் இயற்கைக்கு புறம்பானதென்று '' ஆனால்

''அந்நிய தேசத்தை அபகரித்தலும் வேற்றின மக்களை வேரறுப்பதுவும்

முற்றிலும் இயற்கைக்கு முரணானது''.

தமிழீழ மண்ணில் சுமார் ஐம்பது அறுபது
ஆண்டுகளாகஇயற்கைக்கு முரணாக
அந்நிய சக்திகளின் திட்டமிட்ட ஒரு வல்லாதிக்க
மேலாண்மை நமது மண்ணையும் மக்களையும்
பலிகொண்டு வருகின்றது.
அதுவும் 2009 மே மாதத்திற்கு பிறகு
மண்ணில் மரங்களை நடுவதைப் போல
தமிழீழம் முழுவதும் ஆர்மிக்காரன்
என்னும் பெயரில் மனிதர்கள்
நடப்பட்டிருக்கிறார்கள்.
எமது மக்களோ அகதிகளாய் விடப்பட்டிருக்கிறார்கள் .

தோழர்களே . . . .

''குரலை இழந்த பிறகும் நாம் கர்ஜிக்கிறோம்
கால்கள் உடைந்த பிறகும் நாம் ஓடுகிறோம்
கண்களை மூடிய பிறகும் நாம் ஒளியைப் பார்க்கிறோம்
சிறகுகள் இழந்த பிறகும் நாம் சிரமமில்லாமல் பறந்து வருகிறோம்
தமிழர்களின் தாகமெல்லாம் தமிழீழத் தாயகமென்று''

தளராத மனம் கொள்வோம் . . .
பிறழாத உறுதி ஏற்போம் . . .
பலராலும் தியாகம் செய்த எம்மண்ணில்
திரளாக ஒன்று கூடுவோம் .

''விடுதலையை தமிழர்க்கும்
விடியலை தமிழீழத்திற்கும்
வென்றெடுப்போம்''

''எமது நாடு தமிழீழ நாடு
எமது மண் தமிழீழ மண் ''0 கருத்துக்கள் :