இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? ஜெயலலிதாவா? நானா? : கலைஞர்

29.8.12


மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!” என்று தலைப்பிட்டு திமுக தலைவர் கலைஞர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’அ.தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தாங்கள் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு மாறாக - தி.மு.கவையும் என்னையும் திட்டுவதுதான் நோக்கம் என்ற அடிப்படையிலே வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்கள்.இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முற்றிலும் என் மீதான தாக்குதல்தான்! 2009இல் இலங்கையில் இனக்கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையாம்! அப்பாவி இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு நான்தான் காரணமாம்!2006ஆம் ஆண்டு மே திங்கள் வரை ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தாராம்?

16-4-2002 அன்று சட்டப் பேரவையிலே ஜெயலலிதாவே முன்மொழிந்த தீர்மானம் வருமாறு :-
“விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்” என்பதாகும். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய லட்சணமா இது?17-1-2009 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை.ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்.

ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டாரே, இதுதான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய லட்சணமா?ஜெயலலிதா இப்படியெல்லாம் சொன்னதால் அல்லவா, இலங்கை ராணுவத்தினர் இலங்கைத் தமிழர் களைக் கொன்று குவித்தனர். எனவே இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? ஜெயலலி தாவா? நானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

0 கருத்துக்கள் :