தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் மீண்டும் பொங்கி எழ வேண்டிய நிலை ஏற்படும்.

15.8.12


ஈழப் போராட்ட வரலாற்றில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முக்கியமான மாதமாகும். யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைத் தாக்குதல்களை மேற்கொண்டு குடாநாட்டிற்குள் பிரவேசித்த மாதம் இது.ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முகமாலை முன்னரங்கில் தொடங்கிய சமர் பல முனைகளில் விரிவாக்கம் பெற்றது. சிங்களப் படையினருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதாக அமைந்த இந்தத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் ஆற்றல்களை வெளிப்படுத்திய தாக்குதலாகவும் அமைந்தது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சமர் 2006 ஆகஸ்ட் 11 ஆம் திகதி தொடக்கம் சில நாட்கள் தொடர்ந்து இடம்பெற்றது. இந்த தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் பல தரையிறக்கங்களை மேற்கொண்டனர். பல முனைகளிலும் சிங்களப் படையினருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்திய பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய ரீதியாக இந்தத் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆயினும் இந்தத் தாக்குதல்களால் எதிரி நிலை குலைந்து திக்குமுக்காடினான். எதிரியிடமிருந்து புலிகள் பெருந்தொகையான ஆயுத தளபாடங்களையும் இதில் கைப்பற்றினர். தமிழீழ தேசியத் தலைவரால் மிகவும் நேர்த்தியான முறையில் மேற்படி தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. முகமாலை முன்னரங்கை உடைத்துக்கொண்டு முன்னேறுகின்ற புலிகள் எதிரியை நிலை குலையச் செய்வது. மற்றைய அணிகள் கடல்வழியாக மண்டைதீவு, அல்லைப்பிட்டி ஆகிய இடங்களில் தரையிறக்கங்களை மேற்கொள்வது.

மண்டைதீவில் தரையிறங்கும் அணி இராணுவ நிலைகளைத் தகர்த்தெறிந்து மண்டைதீவுச் சந்திக்கு வருகின்ற அதேவேளை அல்லைப்பிட்டியில் தரையிறங்குகின்ற அணியும் படை நிலைகளைத் தகர்த்தெறிந்து மண்டைதீவுச் சந்திக்கு வந்து இரு அணிகளும் ஒன்றிணைவது. மண்டைதீவில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறித் தளத்தை தகர்த்து தீவகத்திலுள்ள எதிரியை நிலை குலையச் செய்வது. இதுவே இந்தத் தாக்குதல் வியூகமாகும்.ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி அதிகாலை வேளை தாக்குதல்கள் ஆரம்பமாயின. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் உரிய திட்டமிடல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டது. முகமாலை முன்னரங்கத்தை உடைத்துக்கொண்டு முன்னேறிய புலிகளின் அணிகள் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு மிக வேகமாக முன்னேறின. அதேபோல் நீரூந்து விசைப்படகுகளில் வந்த புலிகளின் விசேட அணி அல்லைப்பிட்டியில் தரையிறங்கி தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும் மண்டைதீவில் தரையிறக்கத்தை மேற்கொள்ள முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது.

ஆயினும் அல்லைப்பிட்டியில் தரையிறங்கிய அணிகள் எதிரிக்குப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தின.
புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத சிங்கள இராணுவம் கள முனைகளை விட்டுத் தப்பியோடியது. இதனால் பலாலி, வரணி, யாழ்ப்பாணம் கோட்டை ஆகிய இடங்களிலிருந்த இராணுவத்தினர் பின்தள தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கிருந்த ஆட்லறித் தளங்களிலிருந்து ஏவப்பட்ட ஷெல்கள் பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் வீழ்ந்து வெடித்ததால் பல அப்பாவிப் பொது மக்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் புலிகளின் அணிகள் தமது முன்னைய நிலைகளுக்குத் திரும்பிச் சென்றன. எதிரிக்குப் பெரும் உயிர்ச் சேதத்தையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்திய இந்தத் தாக்குதல்களின்போது புலிகளுக்கு மிகவும் குறைவான இழப்புகளே ஏற்பட்டன. புலிகள் தமது முன்னைய நிலைகளுக்குத் திரும்பும் போது எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருமளவான ஆயுத தளபாடங்களையும் அவர்கள் கொண்டு சென்றனர்.

மேற்படி யுத்தத்தின் போது அல்லைப்பிட்டித் தரையிறக்கத்தைத் தடுப்பதற்கு இராணுவம் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டது. இதற்காக அல்லைப்பிட்டியை ஷெல் தாக்குதலால் துவம்சம் செய்தது. இராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி அல்லைப்பிட்டி புனித பிலிப் நேரியார் தேவாலயத்தில் தஞ்சமடைந்த மக்களை இராணுவம் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்தது.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி சிறிலங்கா இராணுவம் மேற்படி தேவாலயத்தில் தங்கியிருந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் அங்கு தங்கியிருந்த 20 வரையான பொது மக்கள் கொல்லப்பட்டனர். அத் தாக்குதல் இடம்பெற்ற போது இந்த தேவாலயத்தில் தங்கியிருந்த ஏராளமான மக்கள் படுகாயமடைந்தனர்.

இதில் காயமடைந்த பொதுமக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கோ கொல்லப்பட்ட மக்களின் உடலங்களை அப்புறப்படுத்துவதற்கோ இராணுவம் அனுமதி வழங்கவில்லை. காயமடைந்தவர்களை ஏற்றி வருவதற்காக யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து சென்ற அம்புலன்ஸ் வண்டிகள் பண்ணைப் பாலத்திற்கு அப்பால் செல்ல இராணுவம் அனுமதி வழங்கவில்லை. அல்லைப்பிட்டியிலிருந்தும் எந்தவொரு வானங்களும் மேற்படி காயக்காரர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் மேற்படி மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கினர். குறிப்பாக நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் இடம்பெற்றதை விட மோசமான நெருக்கடிகளை அல்லைப்பிட்டி மக்கள் எதிர்நோக்கினர்.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை அல்லைப்பிட்டி புனித பிலிப் நேரியார் தேவாலயத்தில் நடைபெற்றது. அமலமரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த எஸ்.இரத்தினராஜ் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வுகளும் விசேட பூசை வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட மக்கள் தமது உறவினர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இவர்களின் கண்களில் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தமை அவதானிக்கப்பட்டது. அதாவது, இந்த இழப்புகளுக்கு என்றோ ஒரு நாள் காலம் பதில் சொல்லுமா? இந்த அழிவை ஏற்படுத்தியவர்ளை இறைவன் தண்டிப்பானா? என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

கடந்த 30 வருட காலமாக தமிழ் மக்கள் மீது சிங்களம் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்புகளுக்கு என்றோ ஒரு நாள் காலம் பதில் சொல்லும். தமிழினத்தை அழித்தவர்கள் என்றைக்குமே நிம்மதியாக வாழ மாட்டார்கள். தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் அவர்கள் மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்பதை சிறிலங்காவின் ஆட்சியாளர்களும் சர்வதேச நாடுகளும் புரிந்துகொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.

0 கருத்துக்கள் :