சுற்றுலா வலயமாகும் தமிழர்களின் குருதி உறைந்த முள்ளிவாய்க்கால் !

19.8.12


சிங்களப்படையின் தமிழின அழிப்பின் மனிதப் பேரவலம் இடம்பெற்ற முள்ளிவாசூக்கால் கரையோரத்தை உள்ளடக்கிய 22 கிலோ மீற்றர் கடற்கரைப் பிரதேசத்தை இயற்கை சுற்றுலா வலயமாகப் பிரகடனப் படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

நாயாறு தொடங்கி அளம்பில் வரையான 22 கிலோ மீற்றர் கரையோரப் பகுதியே சுற்றுலா வலயமாகப் போகிறது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இரண்டு தடவைகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல்கள் இடம் பெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை அளவீடு செய்யும் பணிகளை அரச நில அளவைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

சுற்றுச்சூழல் அதிகார சபை கரையோரப் பாதுகாப்பு அதிகார சபை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வன பரிபாலன சபை முதலீட்டுச் சபை காணி அபிவிருத்தித் திணைக்களம் நில அளவைத் திணைக்களம் என்பன இணைந்து இது தொடர்பான பணிகளை மேற்கொண்டுள்ளன.

வெளி நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்திலேயே இந்தக் கரையோரப் பகுதியை இயற்கை சுற்றுலா மையமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் திட்டம் குறித்து முல்லைத்தீவு அரச அதிபர் என்.வேதநாயகனிடம் கேட்டபோது 'இந்தக் கரையோரப் பிரதேசத்தில் உள்ளடங்கும் அரச காணிகளை இனங்கண்டு அளவீடு செயும் நடவடிக்கைகளை நில அளவைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது'' என்று தெரிவித்தார். வேறு விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கரையோரத்தில் காணிகளைக் கொண்டுள்ள தனியார் விரும்பினால் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வர்த்த அல்லது முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதிப்பதென அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சுற்றுலா வலயமாக அறிவிக்கப்பட உள்ள இந்தப் பகுதியிலேயே அம்பலவன் பொக்கணை முள்ளிவாய்க்கால் மேற்கு முள்ளிவாய்க்கால் கிழக்கு பழைய மாத்தளன் புதுமாத்தளன் வலைஞர்மடம் வட்டுவாகல் ஆகிய பகுதிகளும் உள்ளடங்குகின்றன.
வன்னியில் மனிதப் பேரவலத்தை உருவாக்கிய இறுதிப் போரின் போது மக்கள் இந்தப் பகுதிகளிலேயே தஞ்சமடைந்திருந்தனர். பலர் இந்தப் பிரதேசத்திலேயே உயிரிழந்தும் இருந்தனர்.
குறிப்பிட்ட பகுதியில் மக்களை மீள்குடியேற்றாத சிங்கள அரசு தமிழ்மக்களை வதைமுகாம்களில் அடைத்துவைத்துவிட்டு தமிழின அழிப்பின் வடுவினை அதன் அடையாளங்களை இல்லதொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :