50 பேரை மணந்து ஏமாற்றிய கேரளத்து அழகியின் லீலைகள்.

23.8.12


50 இளைஞர்களை மணந்து அவர்களை ஏமாற்றிய கேரள அழகி பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்து வருகிறது.

அப்பாவி இளைஞர்களை தனது காதல் வலையில் விழவைத்து அவர்களை மணந்து லட்சக் கணக்கில் பணத்தை ஏமாற்றிவிட்டு ஓடும் கேரள அழகி சகானா குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல இளைஞர்கள் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். சகானா இதுவரை 50 இளைஞர்களை மணந்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அந்த பெண்ணிடம் ஏமாந்தவர்களில் 2 இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் போலீசாரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர்.

2 பேரில் மணிகண்டன் என்பவர் கூறுகையில், நான் முகலிவாக்கத்தில் பிறந்து வளர்ந்தவன். டிப்ளமோ என்ஜினியரிங் படித்துவிட்டு மாருதி கார் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது மனைவி சகானா ஒரு மோசடி ராணி என்பது கடந்த வாரம் தான் தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

செல்போன் மூலம் எனக்கு அறிமுகமான சகானா எடுத்தவுடன் எனது குரல் பிடித்திருக்கிறது என்றும், அதனால் என்னைப் பிடித்திருக்கிறது என்றும் கூறினாள். ஆனால் நான் அவளை நேரில் சந்தித்த பிறகே காதலை ஏற்றேன். தான் சட்டம் படித்துவிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதாகவும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதப் போவதாகவும் தெரிவித்தாள்.

முதலில் யாருக்கும் தெரியாமல் அவளை ரகசியமாக மணந்தேன். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்துடன் அவள் கழுத்தில் தாலி கட்டினேன். தனது சொந்த ஊர் கேரளாவில் உள்ளது என்றும் தாய், தந்தை இறந்துவி்ட்டார்கள் என்று அவள் சொன்னதை அப்படியே நம்பினேன். திருமணம் முடிந்த 2 மாதம் நல்ல மனைவியாக இருந்தவள் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்க வேண்டும் என்று கூறி சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் தங்கினாள். இதையடுத்து நான் அவளை விடுதியில் வைத்து பார்த்து வந்தேன். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் விடுதியை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டாள். அதன் பிறகு போனில் தொடர்பு கொண்ட அவள் தான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதச் சென்றுவிட்டதாகக் கூறினாள். அவளால் நான் பல லட்சம் இழந்துள்ளேன் என்று கூறி அழுதார்.

மற்றொரு வாலிபர் பிரசன்னா கூறுகையில், டிப்ளமோ என்ஜினியரிங் படித்துள்ள நான் புளியந்தோப்பில் வசிக்கிறேன். கால்பந்து வீரராகவும் உள்ளேன். புரசைவாக்கத்தில் உள்ள ஒரு கடையில் சகானாவை முதலில் சந்தித்தேன். அவள் தனது காதலைச் சொல்லி ரகசியத் திருமணம் செய்ய வைத்தாள். பின்னர் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி பெற்றோர் ஆசியுடன் காஞ்சீபுரம் அருகில் உள்ள ஊத்துக்காடு எல்லை அம்மன் கோவிலில் வைத்து அவளை முறைப்படி மணந்தேன். 2 மாதம் நல்ல மனைவியாக இருந்தவள் சட்டம் படிக்கப் போவதாகக் கூறிச் சென்றுவிட்டாள். அதன் பிறகு போனில் மட்டுமே பேசி வந்தாள்.

இதற்கிடையே எனக்கு தெரியாமல் பக்கத்து தெருவில் வசி்க்கும் எனது உறவினர் சுரேஸையும் திருமணம் செய்துள்ளாள். ஒரு நாள் அவள் எனது தாயுடன் மார்க்கெட்டுக்கு சென்றாள். அங்கு வந்த சுரேஸின் தாய் என் அம்மாவிடம் சகானாவை தனது மருமகள் என்று கூறியுள்ளார். எனது தாய் இல்லை இல்லை சகானா எனது மருமகள் என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவள் நான் பிரசன்னாவின் மனைவி என்று கூறியதோடு மட்டுமல்லாமல் சுரேஸின் தாயை மிரட்டிவிட்டு வந்துள்ளாள்.

இந்த தகவல் அறிந்த சுரேஸ் போலீசில் புகார் கொடுத்தார். காவல் நிலையத்திற்கு சென்ற அவள் தான் பிரச்சன்னாவின் மனைவி என்று கூறியிருக்கிறாள். அவளால் நான் ரூ.5 லட்சம் இழந்துள்ளேன் என்றார்.

கமிஷனர் அலுவலகம் தவிர வேப்பேரி, அடையாறு, திருவொற்றியூர், புளியந்தோப்பு போன்ற காவல் நிலையங்களிலும் அவளது கணவன்மார்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் அவளிடம் ஏமாந்த கணவன்மார்கள் 15 பேர் புகார் அளித்துள்ளனர். சென்னை மட்டுமின்றி கேரளாவிலும் அவளின் மாய வலையில் விழுந்து ஏமாந்த கணவன்மார்கள் உள்ளனர். இந்த புகார்கள் குறித்து விசாரித்து வரும் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் சகானாவை தேடி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :