மாங்குளத்தில் சிறிலங்கா படையினரால் 10 வயதுச் சிறுமி பாலியல் துன்புறுத்தல்.

29.8.12


மாங்குளத்தில் 10 வயது சிறுமி ஒருவர் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மாங்குளம் புதிய கொலனியில், தந்தையை இழந்து உறவினருடன் வசித்து வந்த சிறுமியே சிறிலங்கா படைச் சிப்பாயால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2010ம் ஆண்டு இறந்ததை அடுத்து, இவரது தாயார் மறுமணம் செய்து மட்டக்களப்பில் வாழ்ந்து வருகிறார்.

இதையடுத்து .இந்தச் சிறுமியும், அவரது 14 வயதுடைய சகோதரன் மற்றும் 9 வயது, 7 வயதுடைய இரு சகோதரிகளும் தந்தையின் சகோதரி ஒருவரின் பராமரிப்பிலேயே இருந்து வந்தனர்.

இவர்களை பராமரித்து வரும் அந்தப் பெண் சிறிலங்கா படையினருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்ததால், அவர்களின் வீட்டுக்கு சிறிலங்கா படையினர் வந்து போவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த மாதம் சிறுமியின் பாதுகாவலரான பெண் வெளியில் சென்றிருந்த போது, அருகில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 53-2 பிரிகேட் முகாமைச் சேர்ந்த படைச்சிப்பாய் ஒருவர், அந்த வீட்டுக்குச் சென்று சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

இதற்கு சிறுமியின் பாதுகாவலரான பெண்ணின் மகளும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா படைச் சிப்பாயினால் பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக இதுபற்றி எவரிடமும் கூறவில்லை.

எனினும் இந்தச் சம்பவத்தினால் உளநலன் பாதிப்புற்ற நிலையில் இருந்த சிறுமியை, அவதானித்த ஆசிரியர்கள் அவரிடம் விசாரித்த போதே இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

0 கருத்துக்கள் :