முத்துக்குமாருக்கு…….

29.1.12

ன்று ஒரு வியாழக்கிழமை… எழும்பூரில் அலுவலகத்தில் அன்றைய பத்திரிகைப் பணிகளை ஆரம்பித்துக் கொண்டிருந்த நேரம், பரபரப்பாக ஓடி வந்தார் புகைப்படக்காரர்.
‘சார், சாஸ்திரி பவன்ல ஒருத்தன் அப்படியே கொளுத்திக்கிட்டு எரியறான்.. ஒரே பரபரப்பா இருக்கு நான் படம் எடுத்திருக்கேன்,” என்றார் பதட்டத்துடன்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் சாஸ்திரி பவனில், ஒரு மரண ஓலத்துக்கு சாட்சியாக நின்றுகொண்டிருந்தோம். இது சாத்தியமா… என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு மனிதன் தன் உடலில் நெருப்பு வைத்துக் கொளுத்திக் கொள்வானா…?
இது கோழைத்தனமல்லவா… இதை எப்படி ஆதரிக்க முடியும்? என்றெல்லாம் அடுக்கடுக்காக எழுந்த கேள்விகள், அடுத்த நொடியில் மறைந்துபோயின. முத்துக்குமாரின் மரண ஓலமே… ‘ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்… போரை நிறுத்துங்கள். ராஜபக்சே ஒழிக, பிரபாகரனுக்கு ஆதரவு கொடுங்கள்’ என்பதுதான்.
நாற்காலி மனிதர்களில் சிலரைத் தவிர, மற்றெல்லாரும் உணர்வுப்பூர்வமாக ஈழத்து சொந்தங்களுக்காக போராடிக் கொண்டிருந்த நேரம் அது. எத்தனையோ போராட்டங்கள்… ஒரு பக்கம் ஈழத்தில் ஆயிரமாயிரமாய் தமிழர்கள் செத்து விழுந்து கொண்டிருக்க, போரை நிறுத்தக் கோரி அனைவரது குரலும் ஓங்கி ஒலித்தது. நாளும் ஒரு போராட்டம். அன்றைய முதல்வர் கருணாநிதியே கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிக்காக கை கோர்த்தார். சொல்லப் போனால், போராட்டத்தை உச்சத்துக்குக் கொண்டு போனவர் அவர்தான். அந்த நேரத்தில் ‘போர் என்றால் சாகத்தானே செய்வார்கள்’ என்று தத்துவம் பேசியவர்கள் ஜெயலலிதா, சுப்பிரமணிய சாமி, சோ மட்டும்தான். போரை நிறுத்துங்கள் என்று ஒப்புக்காகக் கூட அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா சொல்லவில்லை.
எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருந்தனர் உணர்வாளர்கள். ஆனால் சோனியா காந்தியின் இரக்கமற்ற மத்திய அரசு, கல்லாய் சமைந்து நின்றது. எதையும் கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அரசின் மனசறிந்த கருணாநிதி, மெல்ல மெல்ல தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டார். அப்படியே மத்திய அரசின் தமிழகப் பிரதிநிதியாக மாறி, ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்க ஆரம்பித்துவிட்டார்.
அப்போதுதான்… ‘அடடா… தமிழினத்தின் தலைவன் என நம்பினோமே… கூடவே இருந்து கழுத்தறுத்துவிட்டாரே… இதற்கு நேரடியாக விமர்சனம் பண்ணும் ஜெயலலிதாவே மேலாகத் தெரிகிறாரே…’ என தமிழுணர்வாளர்கள் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்திருந்தனர்.
என்ன செய்தால், இந்த போராட்டத்தை இன்னும் உணர்வுப்பூர்வமாக மாற்றமுடியும், கல்லாய் நிற்கும் மத்திய அரசையும் அதன் கைப்பிள்ளையாய் மாறிப்போன தமிழக அரசையும் கரைய வைக்க முடியும் என எல்லோரும் திகைத்து நின்ற நேரத்தில்தான், முத்துக்குமார் தன் உடலையே எரித்துக் கொண்டான்.

மரண வாக்குமூலம் அளித்தபோது, அத்தனை உடல் வேதனையிலும் அவன் ஓயாமல் உச்சரித்தது ‘ஈழத்து சகோதரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களைக் காப்பாற்றுங்கள்… தலைவர் பிரபாகரனை ஆதரியுங்கள்’ என்பதுதான்.
அன்று பிற்பகல் முத்துக்குமாரின் மரண வாக்குமூலத்தை கீழ்ப்பாக்கம் மருத்துவ பிணவறையின் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி வைகோ படிக்கப் படிக்க, கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரின் கண்களும் குளமாகியிருந்தன. எத்தனை பெரிய நெருப்பை அந்த 29 வயதில் சுமந்துகொண்டிருந்திருக்கிறான்!
தமிழகத்தில் நடப்பது தமிழினப் பற்றுள்ள ஒரு தலைவன் ஆட்சி என்ற நம்பிக்கை சுத்தமாக அற்றுப் போனது அப்போதுதான்.
அன்று முழுக்க எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை… உணவைப் பார்த்தாலே தீயில் வெந்து திட்டுத் திட்டாய் வெளிறிப் போயிருந்த முத்துக்குமார் முகம்தான் தெரிந்தது. மாலையில் முத்துக்குமாரின் தீக்குளிப்பு உலகுக்கு சொன்ன செய்தியை ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெரிய கட்டுரையாக்கி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். இந்தியாவின் மிக அதிகம் விற்கும் பத்திரிகை. அடுத்த இரு தினங்களில் நாடு முழுவதும் ஒரு உண்மை சேரும் என்ற நம்பிக்கை!
ஆனால், இரவு எடிட்டர் பேசினார், வியன்னாவிலிருந்து. “இந்த கட்டுரையால் என்ன நடந்துவிடும் என எதிர்ப்பார்க்கிறாய்… நாம் இதையெல்லாம் ஆதரிக்க முடியாது. கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என முதல் கட்ட கணிப்புகள் வந்துள்ளன. அதை பெரிய கட்டுரையாக உடனே எழுதி அனுப்பு…”
வாய் வரை வந்த வார்த்தையை அடக்கிக் கொண்டு போனை வைத்தேன்… ‘அட போய்யா..!’
-விதுரன்
(இன்று ஜனவரி 29 முத்துக்குமாரின் மூன்றாவது நினைவு தினம்)

0 கருத்துக்கள்: