சிறிலங்காவில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியினைச் சாடியிருக்கும் ஜெயலலிதா

8.4.11


கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமானது இந்திய மத்திய அரசான காங்கிரசுக்கு வழங்கிய தனது ஆதரவினை மீளப்பெற்றிருந்தால் சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான தமிழக்கள் கொல்லப்பட்ட்டதைத் தடுத்திருக்கமுடியும் என அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெயலலிதா கூறுகிறார்.

மத்திய அரசாங்கத்திற்கான தங்களது ஆதரவினை மீளப்பெறப்போகிறோம் என வழமையான பாணியில் அச்சுறுத்துவதை விடுத்து மத்திய காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கிநிற்கும் ஆதரவினை விலக்குவது தொடர்பாக கருத்திலெடுத்திருந்தால் கருணாநிதி சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காத்திருக்கமுடியும் என அதிகளவானோர் பங்குகொண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய ஜெயலலிதா குறிப்பிட்டார்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினால் நிறுத்தப்பட்டிருக்கின்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபட்ட ஜெயலலிதா, கருணாநிதி தனது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக செயற்படுகிறாரேயன்றி தமிழ்நாட்டு மக்களின் நலன் தொடர்பாக எள்ளளவும் கவலைகொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்பில் 13ம் நாளன்று இடம்பெறவுள்ள தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலானது கருணாநிதியினதும் அவரது குடும்ப ஆட்சியினதும் முறைகேடுகள் நிறைந்த ஆட்சியினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என அவர் தொடர்ந்து தெரிவித்தார். கருணாநி ஆறாவது முறையாகவும் தமிழ்நாட்டின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுமிடத்து தமிழ்நாடு முழுவதையும் அவரது குடும்பம் கொள்ளையடித்துவிடும் என செல்வி ஜெயலலிதா தொடர்ந்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் திரைப்படத்துறை, கேபிள் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களை ஏகோபோக ரீதியில் கருணாநிதியின் குடும்பம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது எனக் குற்றம் சுமத்திய ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்னொரு முறை வாய்ப்பு வழங்கப்படுமிடத்து தமிழ்நாட்டின் முதன்மையான அனைத்து அம்சங்களையும் கருணாநிதி குடும்பம் தனதாக்கிவிடும் என்றார்.

2ஜி ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜெயலலிதா கருணாநிதி, தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள் [அவரது மனைவிமார்] மற்றும் மகள் கனிமொழி ஆகியோரே இந்த முறைகேட்டுக்கு முழுப்பொறுப்பு எனக் கூறினார். இந்த முறைகேடு தொடர்பாக தலித் தலைவர்களின் ஒருவரான ஆ.ராசா கைதுசெய்யப்பட்டதையும் சாதீக் பாட்சா தனது உயிரை மாய்ந்துக்கொண்டமையும் ஜெயலலிதா சுட்டிக் காட்டினார்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை தோல்வியுற வைத்து கின்னஸ் உலகசாதனையில் தி.மு.க வின் தோல்வியினையும் பதியவேண்டும் என ஜெயலலிதா வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

குறிப்பிட்டதொரு அரசாங்கத்தினை சனநாயக வழியில் மாற்றுவதற்கான ஒரு முறையாகவே தேர்தல் ஆகும் எனக் குறிப்பிட்ட ஜெயலலிதா இங்கு மக்களையும் ஒரு மாநிலத்தினையும் அடிமைப் பிடியிலிருந்து மீட்பதற்கும் அவர்களை கருணாநிதியின் ஊழல்கள் மலிந்துபோன குடும்ப ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்குமாக இந்தத் தேர்தல் நடாத்தப்படுகிறது என்றார்.

"தமிழ்நாட்டின் தேர்தல் தொகுதிகள் அனைத்தும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதனது கூட்டுக் கட்சிகளுக்கும் தங்களது ஆணையினை வழங்கும் பொன்னான தருணமொன்று காத்திருக்கிறது" என ஜெயலலிதா குறிப்பிட்டார்.

1 கருத்துக்கள் :

bhaskar சொன்னது…

அம்மா சொல்வது மிகவும் சரியே .இலங்கைகு இந்தியா சப்போர்ட் செய கூடாது