இலங்கை எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல

11.4.11


இலங்கை கடந்த காலத்தில் எதிர்கொண்ட பின்னடைவுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காரணமல்ல என்று அமைச்சர் டளஸ் அலஹப்பெரும வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் கடந்த காலங்களில் எதிர்கொள்ளப்பட்ட அனைத்து பின்னடைவுகளுக்கும் 1948 முதல் 2005 வரையான காலப்பகுதியில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களே காரணம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் சேவைகள் மற்றும் திறனபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மஹரகமை இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இளைஞர்களின் பிரச்சினைகள் ஒழுங்கான முறையில் தீர்க்கப்படும்போது கிளர்ச்சிகள் மற்றும் வன்முறைச் சூழல்கள் வெடிப்பதற்கு வாய்ப்பில்லை. அதனைக் கவனத்திற் கொள்ளாத காரணத்தினால் தான் கடந்த காலங்களில் அவ்வாறான பிரச்சினைகள் வெடித்து நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றிருந்தன.

ஆயினும் எமது அரசாங்கம் எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது தடுப்பதில் கவனத்துடன் செயலாற்றுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதனையொத்த கருத்தொன்றை அண்மையில் மாத்தறையில் புதிய மருத்துவமனையொன்றைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அரசியல் முடிவுகளால் பின்னடைவைச் சந்தித்த நாடுகளைப் பட்டியலிட்டால் அதில் முதல் ஐந்து இடங்களில் இலங்கையும் உள்ளடக்கப்படும் என்று அவர் அங்கு உரையாற்றும் போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 கருத்துக்கள் :

esemor சொன்னது…

பாதி உண்மையை உளறியிருக்கிறார். அது சரி, "தமது அரசாங்கம் எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது தடுப்பதில் கவனத்துடன் செயலாற்றுகின்றது" என்று அவர் எதை சொல்கிறார். வடக்கு முழுதும் சிங்களமயமாக்கலையா,தமிழர்களை சுரண்டுவதையா,தமிழ்பெண்களின் வாழ்வை சூறையாடலையா, தமிழ் இளஞர்களை சிறையில் அடைத்து அவர்களின் உணர்வுகளை மழுங்கச்செய்வதையா, தமிழரை முற்றாக அடிமைப்படுத்தி சிங்கள இனபெரும்பாண்மையை நிலை நாட்டுவதையா?