ஈழத்தமிழரின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்

5.4.11


தமிழக சட்டசபைக்கான தேர்தல் எதிர்வரும் 13 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கும் அதேசமயம், இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்தும் கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் காரசாரமாக கருத்துகளை தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.
2002, 2006 ஆம் ஆண்டுகளில் தான் வெற்றிபெற்றிருந்த ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் தமது தாயகத்தில் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கவலை தெரிவித்ததுடன் அவர்களின் புனர்வாழ்வுக்காக மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக உறுதியளித்திருக்கிறார்.

தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க. இந்தத் தடவை தேர்தல் பிரசாரங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் பற்றி அதிகளவுக்கு முன்னிலைப்படுத்தவில்லை. ஆயினும் தி.மு.க. கூட்டணியிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை தொடர்ந்தும் இலங்கைத் தமிழரின் தற்போதைய அவல நிலை குறித்து கூட்டங்களில் பேசி வருகின்றன.

அதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை எதிரணியான அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை தொடர்ந்தும்
மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வருகின்றன.

அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா தமிழ்நாட்டை பஞ்சாப், குஜராத் ஆகியவற்றின் அபிவிருத்திக்கும் பின்தங்கியதாக தி.மு.க. ஆட்சி மாற்றி விட்டதாக நேற்றுக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசத்தின் வளத்தை சுரண்டுவதில் தி.மு.க. ஏற்கனவே உலக சாதனையைப் படைத்துள்ளது. மாநிலம் இப்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

இதேவேளை ஞாயிறு மாலை தூத்துக்குடியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜெயலலிதா கச்சதீவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளார்.

1 கருத்துக்கள் :

நண்பன் சொன்னது…

இவருக்கு பேச என்ன தகுதி இருக்கிறது? இவரும் ஊழலில் சிக்கியவர் தானே .