பத்தொன்பது உள்ளூராட்சி மன்றங்களை இழந்து ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி

18.3.11


கடந்த முறை நடைபெற்றிருந்த உள்ளூராட்சித் தோ்தலில் வெற்றிபெற்றிருந்த பத்தொன்பது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை இழந்து படுதோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்தத்தடவை வெறும் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களில் மட்டுமே அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் வரலாற்றில் அக்கட்சி பெற்ற பாரிய பின்னடைவு இதுவாகத் தானிருக்கும்.

மறுபுறத்தில் கடந்த இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்த திஸ்ஸமஹாராமை பிரதேச சபையையும் பறிகொடுத்து, ஜே.வி.பி. கட்சியும் ஒன்றுமில்லா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அக்கட்சி நான்கு உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும் அவை யாவும் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளவையாகும். அம்பாறைக்கு வெளியே கட்சியின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை அரச தரப்புடன் இணைந்து ஒரு சில இடங்களில் போட்டியிட்டமையும் அக்கட்சிக்கும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பின்னடைவுக்கு வழிகோலியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இம்முறை நடைபெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தோ்தலில் பன்னிரண்டு மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலம் 1977ம் ஆண்டில் மத்திய அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைக் கைப்பற்றிய அளவுக்கு மீண்டும் தமிழ் மக்களின் அரசியல் பலம் வளர்ந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

0 கருத்துக்கள்: