நிதியத்துக்கு கட்டுப்பட்டிருப்பதாலேயே புலிகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவில்லை

1.1.11


கே.பி.யின் வசமிருக்கின்ற புலிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்கினால் 2500 ரூபா என்ற சம்பள அதிகரிப்பினை நாட்டின் சகல உழைக்கும் வர்க்கத்தினருக்கும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டிருப்பதனாலேயே அதனைச் செய்யாதிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியின் நெருக்குதலுக்கு மத்தியில் தற்போது அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கப் போவதாக அரசாங்கம் ஊடகங்களில் தெளிவற்ற தகவல்களை கூறி வருகின்றது. எனவே 2500 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலான உண்மைத் தன்மைகளை வரும் நான்காம் திகதி அரசாங்கம் பாரõளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

கேம்பிரிஜ் ரெரஸ் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

2010 ஆம் ஆண்டினை அரசாங்கம் பொய் வாக்குறுதிகளுடனேயே ஆரம்பித்து பொய்யிலேயே முடித்திருக்கின்றது.

தேர்தல் காலத்தில் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபõ சம்பள அதிகரிப்பினை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். அதுவும் தான் பொய்யைக் கூறத் தயாரில்லை என்றும் கூறினார். ஆனால் 2010 ஆம் ஆண்டு நிறைவடையும் போது அவரது வாக்குறுதி பொய்யாகி விட்டது.

2010 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதி கூறுகையில், பொன்சேகாவைப் போல நான் பொய் கூறத் தயாரில்லை. உழைக்கும் வர்க்கத்தினருக்கு 2500 ரூபா சம்பளத்தை அதிகரிப்பேன். எனவே வேறு கொடுப்பனவுகள் குறித்து இங்கு பேசத் தேவையில்லை என்று கூறினார்.

2010 ஆம் ஆண்டும் முடிவடைந்து விட்டது. ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போது சம்பள உயர்வு குறித்து பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் அரசு பலவித கதைகளைக் கூறி வருகின்றது.

எப்படி இருப்பினும் அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் கொடுப்பனவுகள் குறித்து பேசுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை. வாக்குறுதியின் பிரகாரம் சம்பளத்தை அதிகரிக்கவேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

சம்பளத்தை அதிகரிப்பதற்கு திறைசேரியில் நிதியில்லை என்று வரவு செலவுத் திட்டத்தில் அரசு கூறியது. அவ்வாறு நிதியில்லாது போனமைக்கு அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவமே காரணமாகும்.

நிதி விடயத்தில் அரசு தவறிழைத்திருப்பதால் அரசுக்கு வருமõனமாக ஈட்டவிருந்த 30 பில்லியன் ரூபா வரி வருமõனம் இல்லாது போயுள்ளது.

மேலும் கே.பி. யிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கினால் அதிலிருந்து இரண்டு, மூன்று வருடங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பினை வழங்க முடியும்.

ஆனாலும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டிருப்பதால் இதனை செய்ய முடியாதிருக்கின்றது. 2009 ஜூலை மாதத்தில் அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே இப்போது அரசு செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதி தான் அரசின் செலவினம் குறைப்பாகும். அதன்படி சம்பள அதிகரிப்பினை அரசு வழங்காதிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க மின் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான சூழல் காணப்படுகின்றது.

எனவே மின் கட்டணம் மற்றும் அரசு கூறியுள்ள சம்பள உயர்வு ஆகியவை தொடர்பில் அரசாங்கம் அடுத்த பாராளுமன்ற அமர்வில் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

0 கருத்துக்கள்: