காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் எம்.பி. பாலகிருஷ்ணன் (21), மர்ம நபர்களால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமுற்ற அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பேரைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.
சென்னை ஷெனாய் நகரை அடுத்துள்ள ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் டாக்டர் பத்ரிநாத். இவரது மனைவியும் மருத்துவர். இந்தத் தம்பதியின் ஒரே மகன் பாலகிருஷ்ணன். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்து வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய சீனியர் ஓபன் நீச்சல் போட்டிகளில், 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் "பேக் ஸ்ட்ரோக்' பிரிவில் தனித்தனியே 2 தேசிய சாதனைகளைப் படைத்தார்.
இதையடுத்து, தில்லியில் வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன், ஷெனாய் நகரில் உள்ள நீச்சல் குளத்தில் தினமும் அதிகாலைமுதல் சிறப்புப் பயிற்சியாளரிடம் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நீச்சல் குளத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். சிறிது தூரத்தில் சாலையில் உள்ள போக்குவரத்துத் தடையைக் கடக்க, தனது மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்டியபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்தனர். இதனால், மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் பாலகிருஷ்ணன் நிறுத்தினார். உடனே, இவர்கள் இருவரும் ஒரு முகவரியை விசாரிப்பதுபோல பாலகிருஷ்ணனை நெருங்கி பேச்சுக் கொடுத்தனர். அப்போது எதிர்பாராத வகையில், தாங்கள் மறைத்து எடுத்து வந்திருந்த கிரிக்கெட் ஸ்டெம்ப் மற்றும் மட்டையால் சுற்றி வளைத்து தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் சாலையில் சரிந்து விழுந்து, உதவி கோரி கூச்சல் போட்டார். உடனே, மர்ம நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் குறித்து, இவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டர் ஜெரினா தலைமையில் போலீஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தலையில் காயமுற்ற நிலையில் இப்போது இவர் சென்னை அமைந்தகரையில் தனது பெற்றோர் பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
போட்டியில் பங்கேற்பதைத் தடுக்க சதி முயற்சி?
நீச்சல் வீரர் எம்.பி. பாலகிருஷ்ணன் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பதைத் தடுக்க, கூலிப் படையின் உதவியுடன் இந்தத் தாக்குதல் நடந்ததா என்று போலீஸôர் விசாரிக்கின்றனர். இதையடுத்து, இவருடைய செல் போனை போலீஸôர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த சில நாள்களில் இவரது செல்போனுக்குத் தொடர்பு கொண்டு பேசியவர்களின் பட்டியலைத் தயாரித்து, சைபர் கிரைம் போலீஸôரின் உதவியுடன் விசாரணை தொடங்கியுள்ளனர்.
முதல்வருடன் இன்று சந்திப்பு:இந்த நிலையில், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது பெற்றோர்கள், சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை சந்தித்து முறையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
சிறப்புச் செய்திகள்
Labels
நீச்சல் வீரர் மீது சென்னையில் தாக்குதல்.
5.9.10Labels: தமிழ்நாடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)





0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக