விடுதலைப் புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஈழத்தமிழர்கள் மீது ஜேர்மனியில் சட்டநடவடிக்கை.

1.9.10

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து ஆயுதங்களை வாங்குவதற்கு உதவியதாக மூன்று ஈழத்தமிழர்கள் மீது ஜேர்மனியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கும் விஜிகணேந்திரா (வயது 35) மற்றும் ஜேர்மனியில் குடியுரிமை பெற்றவர்களான சசிதரன் (வயது 33), கோணேஸ்வரன் (வயது 39) ஆகியோருக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயற்பட்டது மற்றும் ஏற்றுமதிச் சட்டங்களை மீறியதான குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் கடந்த மார்ச் மாதம் ஜேர்மனிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்காக 2007 ஜுலை தொடக்கம் 2009 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் மூன்று மில்லியன் யூரோ பணத்தை தமிழ் மக்களிடம் திரட்டி ஆயுதங்கள் வாங்குவதற்காக அனுப்பி வைத்துள்ளதாக இந்த மூவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்பது பற்றி ஜேர்மனிய சட்டநிபுணர்கள் தகவல் வெளியிடவில்லை.

0 கருத்துக்கள்: