முன்நாள் போராளிகளிடம் 200 ரூபா வீதம் இராணுவத்தினர் வசூலிப்பு.

2.9.10

மட்டக்களப்பு வெலிக்கந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் ஒவ்வொருவரிடமும் தலா 200 ரூபா தருமாறு இலங்கை இராணுவம் வசூலித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்தோடு தடுத்து வைக்கப்பட்டுள்ள தடை முகாமில் உள்ள போராளிகள் பல்வேறு கெடுபிடிகளுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாவதாக அவர்களது உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது இவ்வாறிருக்க கடந்த திங்கட்கிழமை படையினர் போராளிகளிடம் இருந்து ரூபா 200 ஐ வசூலித்துள்ளனர்.
உறவினர்கள் வந்து முன் நாள் போராளிகளைப் பார்வையிடும்போது கொடுத்துச் சென்ற பணத்தைப் பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர், பணம் தர மறுத்தவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். பணம் கொடுத்த போராளிகளையே தாம் முதலில் விடுவிக்க இருப்பதாகவும், பணம் தர மறுத்தவர்களை தாம் தொடர்ந்தும் தடுப்புமுகாமில் வைத்திருக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். போரினால் சொத்துக்களை இழந்து, வீடு வாசல்களை இழந்து, தவிக்கும் மக்கள், தடுப்பு முகாமில் உள்ள தமது பிள்ளைகள் ஏதாவது நல்ல உணவை வாங்கிச் சாப்பிட ஏதுவாக பணத்தைக் கொடுத்தால், அதனையும் பிடுங்க நினைக்கும் இராணுவத்தை எந்த வகையில் சேர்ப்பது.
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதை தட்டிப்பறித்ததாம்.... என்ற பழமொழியே நினைவுக்கு வருகிறது.

0 கருத்துக்கள்: