642 ஏக்கர் விவசாய காணிகளை ஒப்படைத்த படையினர்

18.9.14

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்கள், இன்று வியாழக்கிழமை (18) உத்தியோகபூர்வமாக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் என்.ஏ.ஜே.சி.டயஸ், முல்லைத்தீவு, வாவட்டி குளப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் முன்னிலையில் விவசாயிகளிடம் நிலங்களை ஒப்படைத்தார்.

இந்த விவசாய நிலங்கள், எதிர்வரும் 25ஆம் திகதியே ஒப்படைப்பதாக இருந்த போதும், இராணுவத்தினர் அந்த நிலங்களை முன்னதாகவே விவசாயிகளிடம் கையளித்துள்ளனர்.
இதனையடுத்து, வியாழக்கிழமை (18) காலை 10 மணியளவில், பூஜையை மேற்கொண்ட விவசாயிகள், நிலத்தை பண்படுத்தி சிறு நிலப்பரப்பில் நெல் பயிரிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, முழு விவசாய நிலங்களையும் பண்படுத்தி விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இதேவேளை, இந்த நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக, மானிய உரம் மற்றும் விதை நெல் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உறுதியளித்தார்.

இராணுவத்தினர் வசமிருந்த கேப்பாப்பிலவு, வாவெட்டி குளம், இயன்கன்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள 67 விவசாயிகளுக்கு சொந்தமான 320 ஏக்;கர் விவசாய காணியும்,  விமானப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இயன்கன்குளம் பகுதியிலுள்ள 32 விவசாயிகளுக்கு சொந்தமான 82 ஏக்கர் வயல் நிலமும், வாவெட்டிக்குளம் பகுதியிலுள்ள 34 விவசாயிகளுக்கு சொந்தமான 240 ஏக்கர் வயல் நிலமும் விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மேற்படி நிலங்களை சுற்றியிருந்த முட்கம்பி வேலிகள் அகற்றப்பட்டு, விவசாயம் செய்யக்கூடிய விதத்தில் இராணுவத்தினரால் இந்த நிலங்கள் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE - 642 ஏக்கர் விவசாய காணிகளை ஒப்படைத்த படையினர்

பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை

17.9.14

பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே.

இந்த அபிப்பிராயம் தெரிவிப்பதை பற்றி சிங்களப் பேரினவாதம் கோபித்தாலோ, அரசாங்கம் கோபித்தாலோ நான் பயப்படப்போவதில்லை.  ஏனென்றால், நான் இஸ்லாத்தை விசுவாசித்தவன் என்ற அடிப்படையில் உண்மையைக் கூற ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. இவ்விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி எனக்கு பழக்கமில்லை.

மேற்கூறிய இதேவிடயத்தைப் போல, இலங்கை முஸ்லிம்களுக்குள் இன்றுவரையும் இன்னும் எதிர்காலத்தில் ஆயிரம் வருடங்கள் போனாலும்,  என்றென்றும் மக்களால் மதிக்கப்படக்கூடிய ஒரேயொருவர் மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.
இதேவேளை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி,  மறுத்தாலும் சரி, மறைத்தாலும் சரி இன்னுமொரு கசப்பான உண்மையையும் இங்கு பகிரங்கமாக கூறியேயாக வேண்டும்.

சிங்கள பௌத்த மக்களுக்குள் இன்னும் உயிரோடு இருப்பவர்களில் இந்தக் கொடிய யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிகூடிய செல்வாக்குடன் மக்கள் மனங்களில் அழியாத இடத்தைப் பிடித்தவர் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்க்ஷ என்பதை எவரும் மறுதலிக்கமுடியாது. கசப்பாயினும் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

அரசாங்கத்தின் கைக்கூலியாக இருந்துகொண்டு பஷீர் சேகுதாவூத் இத்தகைய கருத்தை பரப்புகிறார் என்று எவர் கூறினாலும், அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை. இந்த உண்மையை நான் பகிரங்கப்படுத்தியதற்காக நீங்கள் எனக்கு ஒரு வாக்குகேனும் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை. 
இந்த அடிப்படை யதார்த்தங்களை இலங்கையில் வாழ்கின்ற எல்லா இன மக்களும் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. இறந்த பின்னர் இன்னமும் தமிழர்களுக்குள் அதிகூடிய செல்வாக்குச் செலுத்தும் தலைவர் பிரபாகரனே என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டும்.

அதேபோல, மறைந்த பின்னரும் முஸ்லிம்களின் மனங்களில் மறையாமல் வாழும் மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் என்பதையும்  சிங்களப் பெரும்பான்மையும் தமிழரும்   உணரவேண்டும்.
தேசிய ஐக்கியம் என்பது மூன்று இனங்களின் இணைவே. இதில் எள்ளளவேனும் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.  மூவினங்களின் மன நிலையும் கொள்கைகளும் ஒன்றாகப் பயணிப்பதே தேசிய ஐக்கியம். தேசிய ஐக்கியம் என்பது இந்த அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதிலேயே தங்கியுள்ளது.
வர இருக்கின்ற பெரிய அரசியல் மாற்றத்தை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்வதற்கும் அதை கடந்து செல்வதற்கும் தங்களை தயார்ப்படுத்தவேண்டும்.

தலைவர் அஷ்ரப் இருந்தபோது நாடு பிளவுபட்டிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ. இனர் நாட்டின் எந்தப்பாகத்திலும் எந்தத் தாக்குதலையும் நடத்தக்கூடிய வல்லமை பெற்றிருந்தார்கள். தமிழ் மக்களின் தேசிய விடுதலைச் சின்னமாக விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் இருந்தார்கள்.
அப்பொழுது சிங்கள கடும் போக்குவாதம் மிகவும் பலவீனமாக இருந்தது. ஆகையினால், மிகவும் பலவீனப்பட்டுப்போயிருந்த சிங்கள, பௌத்த கடும்போக்குவாதத்தால் அரசாங்கத்துக்குள்ளே அதன் செல்வாக்கைச் செலுத்த முடிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் சமூகம் தன்னை விரைந்து தயார்ப்படுத்திக்கொண்டு தெளிவாக தனது அரசியல் பயணத்தை முற்கொண்டு செல்லவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றது. எனக்கு கட்சி அரசியலோ, நாடாளுமன்றக் கதிரையோ, அமைச்சுப் பதவியோ முக்கியமல்ல. நாட்டில் நிலவுகின்ற யதார்த்த நிலைமைகளைச் சொல்லி இந்த சமூகத்தை அறிவூட்ட வேண்டும் என்று நினைக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 14ஆவது வருட சிரார்த்த தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE - பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை

முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா: மனைவி கைது

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொடுத்த மனைவியை, திங்கட்கிழமை (15) கைது செய்ததாக, யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர்.

சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, திங்கட்கிழமை (15) மாலை உணவு கொடுப்பதற்காக அவரது மனைவி வந்திருந்தார்.

குறித்த பெண் கொண்டு வந்த உணவை சோதித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா இருப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து, அப் பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி பெண்ணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
READ MORE - முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா: மனைவி கைது

மொனராகலையில் நிலநடுக்கம்

மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ எனுமிடத்தில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கம் பணியகம் அறிவித்துள்ளது.
2.1 ரிச்டர் அளவிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பணியகம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 5.10க்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த பணியகம் அறிவித்துள்ளது.
READ MORE - மொனராகலையில் நிலநடுக்கம்

விக்னேஸ்வரனை ஆயர்களிடம் குற்றம் சாட்டிய மஹிந்த: நோர்வேயிடம் முறையிட்ட ஆயர்

வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிப்பதில்லை என ஆயர்களிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியதாக, யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் நோர்வே தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9.00 மணியளவில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறேட் லோசனுக்கும், யாழ். ஆயருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ். ஆயர்இல்லத்தில் இடம்பெற்றது.
 இதில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் ஆயர் தெரிவிக்கையில்,
ஆயர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்ற போது வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்று தாங்கள் வினவிய போது ஜனாதிபதி இவ்வாறு மறுப்பு தெரிவித்தார்.
அதாவது, அரசு, மாகாண சபையுடன் ஒத்துழைத்து செயற்படத் தயார் ஆனால் மாகாணசபைதான் அரசுடன் ஒத்துழைத்து செயற்படத் தயார் இல்லை என்றும் வடக்கு முதலமைச்சர் அரசுடனான கூட்டங்களுக்கு ஒழுங்கில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஆயர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பரிசுத்த பாப்பரசர் வடபகுதிக்கு வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்று நோர்வேதூதுவர் வினவினார். அதற்கு பதிலளித்த ஆயர் பரிசுத்த பாப்பரசர் அரசியல் வாதியல்ல அவர் சமயவாதி அவர் வருகை தருவது சமய நடவடிக்கைக்காகவே ஆகவே நாங்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE - விக்னேஸ்வரனை ஆயர்களிடம் குற்றம் சாட்டிய மஹிந்த: நோர்வேயிடம் முறையிட்ட ஆயர்

இனிப்பு கொடுத்து, எட்டு வயது பேத்தியை துஷ்பிரயோகம் செய்த தாத்தா

14.9.14

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் 8 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை (தாயின் தந்தை) ஞாயிற்றுக்கிழமை (14) காலை கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுமியை அவளது தாத்தா, தொடர்ந்து 9 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
இனிப்பு பண்டங்களை வாங்கிக்கொடுத்து, அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர், இவ்விடயத்தை வெளியில் சொல்லவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தனது மகளில் மாற்றங்கள் இருப்பதை கண்டுகொண்ட தாய், மகளிடம் கேட்டபோது, தாத்தா தனக்கு செய்தவற்றை அச்சிறுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தந்தை சனிக்கிழமை (13), யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமியை வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (14) காலை, தாத்தா கைது செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
READ MORE - இனிப்பு கொடுத்து, எட்டு வயது பேத்தியை துஷ்பிரயோகம் செய்த தாத்தா

நவனீதம்பிள்ளையைப் போன்றே அல் ஹுசைனையும் !!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையைப் போன்றே புதிய ஆணையாளர் அல் ஹுசைனையும் அரசாங்கம் விமர்சிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த யார் வந்தாலும் சென்றாலும் எவ்வித பயனும் இல்லை.
அரசாங்கத்தின் கொள்கைகள் என்ன என்பதே அரசாங்கத்திற்கு முக்கியமானதாக காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையே இதற்கான காரணமாகும்.

நவனீதம்பிள்ளையை திட்டித் தீர்த்தவர்கள், இளவரசர் அல் ஹுசைனையும் திட்டுவார்கள்.
எம்மவருக்கு எல்லோரையும் திட்டுவதனைத் தவிர வேறு எதுவும் தெரியாது அல்லவா என சுஜீவ சேனாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
READ MORE - நவனீதம்பிள்ளையைப் போன்றே அல் ஹுசைனையும் !!

முன்னாள் எம்.பி.க்களின் வீடுகளில் குடிநீர், மின்சார இணைப்பு துண்டிப்பு

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி.க்கள் டெல்லியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும். அப்போது தான் அந்த வீடுகளை புதிய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுக்கு ஒதுக்க முடியும்.

தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கடந்த ஜூன் 26-ந் தேதியில் இருந்து முன்னாள் மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுக்கு அரசு வீடுகளை காலி செய்யும்படி வேண்டுகோள் விடுத்தது. பலர் வீடுகளை காலி செய்யாததால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பலமுறை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியும் பலர் தங்களது வீடுகளை காலி செய்யவில்லை.

அவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதிக்கெடு இந்த மாதம் 4-ந் தேதியுடன் முடிந்தது. அதன் பின்னரும் வீடுகளை காலி செய்யாததால், பாராளுமன்ற வீட்டுவசதி குழு இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அளித்தது. அந்த புகாரின் அடிப்படையில் அரசு பங்களாக்களை காலி செய்யாத முன்னாள் மந்திரி மற்றும் எம்.பி.க்களின் வீடுகளில் குடிநீர், மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணியில் டெல்லி மாநகராட்சி 5-ந் தேதியில் இருந்து ஈடுபட்டு வருகிறது.

முன்னாள் மத்திய விமானப் போக்குவரத்து மந்திரியும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவருமான அஜீத்சிங்குக்கு துக்ளக் ரோட்டில் 12-ம் எண் அரசு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தது. அவரும் அரசு பங்களாவை காலி செய்யாததால், இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் போலீசாருடன் சென்று வீட்டை காலி செய்யும்படி கூறினார்கள். ஆனால் அங்கு அஜீத்சிங் இல்லை.

 அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தபோது அஜீத் சிங்கின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று டெல்லி மாநகராட்சி அந்த வீட்டுக்கான குடிநீர் மற்றும் மின்சார இணைப்பை துண்டித்தது.

இதேபோல முன்னாள் எம்.பி.க்கள் முகமது அசாருதீன், ஜிதேந்திரசிங், நீரஜ் சேகர், கே.எஸ்.ராவ் உள்பட 30 எம்.பி.க்களின் வீடுகளில் குடிநீர், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் சிலர் தங்களது வீடுகளை காலி செய்துள்ளனர். ஆனாலும் இன்னும் 15 பேர் அரசு வீடுகளை காலி செய்யாமல் இருக்கிறார்கள் என்று ஒரு அதிகாரி கூறினார்.
READ MORE - முன்னாள் எம்.பி.க்களின் வீடுகளில் குடிநீர், மின்சார இணைப்பு துண்டிப்பு

நைஜீரியாவில் ராணுவ தாக்குதலில் போகோ ஹரம் தீவிரவாதிகள் 100 பேர் சாவு

நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாடு உருவாக்க வலியுறுத்தி தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்துடன் போரிட்டு வருகிறார்கள். மேலும் அப்பாவி பொதுமக்களை கடத்தி கொன்றுகுவித்தும் வருகிறார்கள்.

இந்த நிலையில் போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த கொண்டுகா நகரில் நேற்று முன்தினம் நைஜீரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் குண்டுகளை வீசி வான்வழியாகவும், தரைமார்க்கமாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும், ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய வாகனங்களையும் ராணுவத்தினர் கைப்பற்றினர்.
READ MORE - நைஜீரியாவில் ராணுவ தாக்குதலில் போகோ ஹரம் தீவிரவாதிகள் 100 பேர் சாவு

சுவாமியை உடனே கைது செய்ய வேண்டும் !!

13.9.14

தமிழக அரசை தீவிரவாதிகளின் நண்பன் என்று கூறி வரும் சுப்ரமணியசுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தமிழ்நாடு மற்றும் ஈழம் வாழ் தமிழர்களின் உரிமைகளுக்கான குரல் கொடுத்து மிகச் சரியான போற்றுதலுக்குரிய நகர்வுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாட்டு அரசை தீவிரவாதிகளின் நண்பன் என்று தமிழினத் துரோகி சுப்பிரமணியசுவாமி விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமியின் சிங்களக் கூட்டாளியான இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திலேயே நிறைவேற்றி தமிழினத் துரோகிகளையும் எதிரிகளையும் நடுங்க வைத்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

இந்த நிலையில் சொட்டு நீரும் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து இன்னுயிரை ஈந்த தியாக தீபமாம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ்நாட்டு அரசு அனுமதி கொடுத்துவிட்டதாம். அதனாலேயே தமிழ்நாட்டு அரசு தீவிரவாதிகளின் நண்பனாகிவிட்டது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் இறுமாப்புடன் எழுதுகிறான் துரோகி சுப்பிரமணிய சுவாமி.

தமிழக மீனவர்களை சிங்கள பேரினவாதிகளிடம் காட்டிக் கொடுத்த சுப்பிரமணிய சுவாமி மீது ஒட்டுமொத்த தமிழ்நாடே கடும் கோபத்தில் இருக்கிறது!

தமிழ்நாட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக இலங்கையுடன் நட்பு பாராட்டிக் கொண்டு தமிழ்நாட்டின் சட்டவிரோதியாக மாறிவிட்ட சுப்பிரமணிய சுவாமி தமிழகத்திலே நுழையவே கூடாது என்று அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தடையும் விதித்துள்ளது.

இப்படி தமிழ்நாட்டு அரசையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் உலகத் தமிழர்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் தமிழினத் துரோகி சுப்பிரமணிய சுவாமி டெல்லியில் பதுங்கிக் கொண்டு வாலாட்டிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தால் அது இனியும் நடக்காது என்று எச்சரிக்கிறோம்.

இந்த தமிழ்நாட்டின் சட்டவிரோதியான சுப்பிரமணிய சுவாமியை தமிழ்நாடு அரசு உடனே கைது செய்து சிறையில் அடைப்பதுதான் சரியான பதிலடியாக இருக்கும்.

ஆகையால் தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமியை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE - சுவாமியை உடனே கைது செய்ய வேண்டும் !!